×

நெடுஞ்சாலையில் வாகனங்களை கண்காணிக்க தர்மபுரி உட்கோட்டத்தில் 1600 அதிநவீன சிசிடிவி கேமராக்கள்-கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை

தர்மபுரி : தர்மபுரி டிஎஸ்பி காவல் உட்கோட்டத்தில் 1600 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை கண்காணிக்கும் கேமராக்கள் அதிகம் பொருத்தப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தலை தடுக்க அதிநவீன கேமரா பொருத்தி வெள்ளோட்டம் நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 25 போலீஸ் ஸ்டேஷன்களில் 1200க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்த ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் பொதுமக்கள், வணிகர்கள் உதவியுடன் சிசிடிவி கேமராக்கள் தெருக்கள், சாலையின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 25 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றச்செயல்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் திருட்டு, வழிப்பறி, நகைப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை, சிசிடிவி கேமரா கொண்டு கண்காணித்து பிடித்து கைது செய்துள்ளனர்.  சமீபத்தில், தர்மபுரி நகரில் பஸ்களில் 8க்கும் மேற்பட்ட மூதாட்டிகளிடம் நகை பறித்த 3 பெண்களை, போலீசார் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து கைது செய்தனர். அவர்களிடம் 22 பவுன் நகைகளை பறிமுதல் செய்து, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தர்மபுரி நகரில் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், கடைவீதி, மார்க்கெட், அரசு மருத்துவமனை, நகரின் முக்கிய சந்திப்பு சாலைகள், முக்கிய தெருக்கள், தியேட்டர்கள், வங்கி, நகைக்கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தர்மபுரி நகரில் 750 கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 512 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு சங்கங்கள், கிராமங்களில் இளைஞர் நற்பணி மன்றங்கள், காவல்துறை இணைந்து சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டம் தொப்பூர் முதல் காரிமங்கலம் வரை, தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தினசரி பல ஆயிரகணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, சேலம், கோவை, கேரளா, மதுரை செல்லும் வாகனங்கள் அதிகம் செல்கின்றன. இதில் கனரக வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களில் கடத்தப்படும் பொருட்களை கண்காணிக்க அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்,’ என்றனர்.இதுகுறித்து தர்மபுரி டிஎஸ்பி வினோத் கூறியதாவது: தர்மபுரி டிஎஸ்பி உட்கோட்டத்தில் 6 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் தொப்பூர், தர்மபுரி, மதிகோன்பாளையம், காரிமங்கலம் போலீசார், சுழற்சி முறையில் தேசிய நெடுஞ்சாலை சாலையில் கண்காணிப்பிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். குற்றச்செயல்களை தடுக்க இந்த 6 காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய சந்திப்பு சாலைகளில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தர்மபுரி நகரில் மட்டும் ₹28 லட்சம் மதிப்பில் 512 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வழிப்பறி, திருட்டு, பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 89 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ₹45 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து, உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். தற்போது கஞ்சா கடத்தலை தடுக்க அதிநவீன கேமரா பொருத்தி வெள்ளோட்டம் நடந்து வருகிறது. இந்த கேமராவில் வாகனங்கள் வேகமாக சென்றாலும் வாகனத்தின் நம்பர் பிளேட் தெளிவாக பதிவாகும் (ஆட்டோ மெட்டிக் நம்பர் பிளேட் ரெககனேசன்) வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டரின் பொதுநிதியில் இருந்து இந்த கேமரா வாங்கப்பட உள்ளது. அடுத்தமாதம் தீபாவளி பண்டிகை வர உள்ளது. நகரின் மூன்றாவது கண்ணாக கருதப்படும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post நெடுஞ்சாலையில் வாகனங்களை கண்காணிக்க தர்மபுரி உட்கோட்டத்தில் 1600 அதிநவீன சிசிடிவி கேமராக்கள்-கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Darmapuri Udkotam ,Darmapuri ,National Highway ,Darmapuri Udgota ,Highway 1600 ,Dinakaran ,
× RELATED அத்திப்பட்டு தேசிய நெடுஞ்சாலை...